×

சித்திரை மாதத்தின் தெய்வீக சக்திகளும் ராசி பலன்களும்!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

சித்திரை 9 (22-04-2023) குரு, மேஷ ராசிக்கு மாறுதல்
சித்திரை 20 (03-05-2023) சுக்கிரன், மிதுன ராசிக்கு மாறுதல்
சித்திரை 29 (12-05-2023) செவ்வாய், கடக ராசிக்கு மாறுதல்

நவக்கிரக நாயகன் எனப் பூஜிக்கப்படும் சூரியன், மீன ராசியை விட்டு, மேஷ ராசியில் பிரவேசிக்கும் நன்னாளே தமிழ்ப் புத்தாண்டான சோப கிருது வருடம் மலரும் தெய்வீகத் திருநாளாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. மேஷ ராசியில், சூரியன் அவரது உச்ச பலத்தைப் பெற்றுத் திகழ்கிறார். உலக வாழ்வை நீத்த, நமது முன்னோர்களுக்கு வருட திதி, மாதப் பிறப்பு, அமாவாசை, சூரிய, சந்திர கிரகண காலங்களில் நாம் ஆற்றும் பூஜைகள், பக்தியுடன் நாம் அளிக்கும் எள் கலந்த தீர்த்தம், ஆகியவற்றை, அவர்களிடம் கொண்டு சேர்ப்பது, சூரியனே! ஆண்டுதோறும் நாம் செய்யும் பித்ரு பூஜை தினத்தன்று, சூரியன் மற்றும் தர்ம ராஜர் ஆகியோரின் அனுமதி பெற்று, சுவர்ணமயமான (தங்கம்) விமானம் மூலம் நம் மூதாதையர், சூரிய கிரணங்களின் மூலம் நமது இல்லங்களுக்கு நேரில் வந்து, நமது பூஜைகளை ஏற்று, நம்மை ஆசீர்வதித்து, மீண்டும் தங்கள் பித்ரு லோகங்களுக்கு அதே சூரிய கிரணங்களின் மூலம் திரும்பிச் செல்வதாகப் புராதன நூல்கள் விவரித்துள்ளன.

சூரியனின் மருத்துவ சக்தி

சூரியனின் கிரணங்களுக்கு மகத்தான மருத்துவ சக்திகள் உள்ளதை “சரக் ஸம்ஹிதை” (மகரிஷி சரகர் அருளியது), “சுஸ்சுருத ஸம்ஹிதை” (மகரிஷி சுஸ்சுருதர் அருளியது), “பாஸ்கர ஸம்ஹிதை”, “அஷ்டாங்க ஹிருதயம்” போன்ற பிரசித்திப் பெற்ற மருத்துவ, ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. இவற்றை இன்றைய மேலைநாட்டு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களும் உறுதி செய்துள்ளனர். உதாரணமாக, வெண்குஷ்டம் (Leucoderma), ஒற்றைத் தலைவலி, நரம்பு சம்பந்தமான சில உபாதைகள், ரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு தினமும் சில மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் அமர்ந்திருக்கும் சிகிச்சை முறையை பல மேலைநாடுகளின் மருத்துவமனைகளில் கடைப்பிடித்து வருகின்றன.

கிரகண காலங்களில், கருவுற்றிருக்கும் பெண்கள் மீது கிரகணச் சாயை பட்டுவிட்டால், அது நேராக, பெண்ணின் உடலினுள் ஊடுருவி, கருவிலுள்ள சிசுவைப் பாதிப்பது அனுபவத்தில் கண்டுவரும் உண்மையாகும். இதனை நம் நாட்டின் மிகப் பழமையான ஆயுர்வேத நூல்கள் குறிப்பிட்டுள்ளன. பெறற்கரிய சுக்கில யஜூர் வேதத்தை, மகரிஷி யாக்ஞ வல்கியர் மூலம் நமக்கு அளித்தருளிய பெருமையும், கருணையும் சூரிய பகவானையே சேரும். தமிழக மக்களுக்கு, அன்னை காவிரியை பரம கருணையுடன் தந்தருளிய மகரிஷி அகஸ்தியரின் உபதேசத்தினால் கிடைத்த ஆதித்ய ஹிருதய மகா மந்திரத்தின் சக்தியினால், ராமபிரான், ராவணனை யுத்தத்தில் வீழ்த்த முடிந்தது! இத்தகைய தன்னிகரற்ற தெய்வீக சக்தியும், பெருமையும் பெற்ற சூரியனின் தந்தை வேதகால மகரிஷியான காஸ்யபராவார்.

சூரியனுக்கு, ஆதித்யன், அருணன், தினகரன், கதிரவன், பாஸ்கரன் என்ற பல பெயர்கள் உண்டு. ஜோதிடக் கலை, சூரியனை “ஆத்ம காரகர்” எனவும் “பித்ரு காரகர்” எனவும் போற்றுகிறது. தர்ம சாஸ்திரத்தின் சூட்சும (ரகசிய) பொருட்களை அறிந்துள்ள எழுவரில் சூரியனும் ஒருவர். இவரது அளவற்ற பெருமைகளை வேதங்களும், இதிகாச புராணங்களும், பாஸ்கர ஸம்ஹிதை போன்ற விஞ்ஞானப் பூர்வமான நூல்களும் விவரித்துள்ளன. குறிப்பிட்ட சில நோய்களுக்கு, தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது, தன்னிகரற்ற சிகிச்சை என ஆயுர்வேதம் வற்புறுத்திக் கூறியுள்ளது. ஜனன கால ஜாதகத்தில், எந்த அளவிற்கு சூரியன் பலம் பொருந்தியவராக அமையப்பெற்றிருக்கின்றாரோ, அந்தளவிற்கு ஜாதகரின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

வேத மந்திரங்களின் ஈடிணையற்ற சக்தியும் பெருமையும் கொண்டுள்ள காயத்ரி மகா மந்திரத்திற்கு உரியவர் சூரியதேவனேயாவார். மகரிஷி வேத வியாஸரின் கீழ்க்கண்ட ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி, சூரியபகவானைப் பூஜித்துவந்தால், பல பிறவிகளில் செய்துள்ள பாபங்கள் அகலும்; வாழ்க்கை மலரும்.

“ஜபாகுஸும ஸங்காஸம் காஸ்யபேயம் மஹாத்யதிம்
தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்”

சித்திரை மாத விசேஷ, புண்ணிய தினங்கள்

சித்திரை 1 (14-04-2023) வெள்ளிக்கிழமை : தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் புண்ணிய தினம். பித்ருக்களைப் பூஜிக்க வேண்டிய விஷூ புண்ணிய காலமும் இன்றே!

சித்திரை 4 (17-04-2023) திங்கட்கிழமை: பகவான் மகாவிஷ்ணு மீனாக (மத்ஸ்ய) அவதாரம் எடுத்த புண்ணிய தினம்.

சித்திரை 9 (22-04-2023) சனிக்கிழமை: ஆதிசேஷன், கிருஷ்ண பகவானின் மூத்த சகோதரன் பலராமனாக அவதரித்த புண்ணிய தினம்.

சித்திரை 10 (23-04-2023)ஞாயிற்றுக்கிழமை : அட்சய திருதியை எனும் தன்னிகரற்ற புண்ணிய தினம்.

அட்சய திருதியையின் விசேஷப் பெருமைகள்!

  1. இமயத்தின் ஆழ்ந்த பகுதியில் திகழும் பத்ரி ஆஸ்ரமத்தின் (மானா) குகையில் விநாயகப் பெருமானுக்கு வியாஸ பகவான் மத் மகாபாரதத்தைச் சொல்ல ஆரம்பித்த தினம்.
  2. பரசுராமரின் அவதார தினம் இன்று.
  3. காட்டில் வசித்து வந்த திரௌபதிக்கு, பகவான் கண்ணன், அட்சய பாத்திரம் (சூரியன் பகவான் கொடுத்தது) அருளியதினம்.
  4. பரம பவித்திரமான பாகீரதி கங்கை சிவபெருமானின் ஜடாமுடியிலிருந்து பூலோகத்திற்கு ஐந்து பிரவாகமாக பூமியில் எழுந்தருளிய தினம்.
  5. ஆந்திராவின் பிரசித்திப் பெற்ற சிம்மாச்சலம் வராக நரசிம்மர் சந்தனப்பூச்சு அகற்றப்பெற்று, திவ்ய தரிசனம் தந்தருளும் ஒரே தினம். இன்று மட்டும்தான், அவரது நிஜ திவ்ய ரூபத்தைத் தரிசிக்க முடியும். அட்சய தினத்தன்று, நாம் அளிக்கும் தானம், பல்கிப் பெருகி பல மடங்கு நல்ல புண்ணியத்தை அளிக்கும். ஏழைகளுக்கும், பசுக்களுக்கும் உணவளிப்பது, துன்பப்படுபவர்களுக்குப் பொருளுதவி செய்தல், நோயுற்றவர்களுக்கு, வைத்திய உதவி, வறுமையினால் வாடுபவர்களுக்கு, வஸ்திரம் கொடுப்பது ஆகியவை நூறு மடங்கு புண்ணிய பலனைப் பெற்றுத் தரும். இன்று தங்கம், வெள்ளி வாங்கினால் அவை பெருகும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தே உள்ளது. இது உண்மையே. வெள்ளிப் பாத்திரத்தில் தயிர் அன்னம் நிரப்பி, ஏழைகளுக்கும், பெரியோர்களுக்கும் தானமாகக் கொடுப்பது கற்பனைகளையும் மீறிய மகா புண்ணிய பலனைத் தரும் எனப் புராதன நூல்கள் உறுதியளிக்கின்றன. இன்று திருக்கோயில்களில் ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்தாலும், பல பிறவிகளுக்குக் குறைவற்ற செல்வமும், மனம் நிறைந்த இல்வாழ்க்கையும், அமையும் என பண்டைய தர்ம சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது

சித்திரை 12 (25-04-2023)செவ்வாய்க்கிழமை : இறைவனின் அம்சமான ஆதி சங்கரரும், ஆதி சேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீமத் ராமானுஜரும் அவதரித்த மகத்தான புண்ணிய தினம்.

சித்திரை 14 (27-04-2023) வியாழக்கிழமை : பரம பவித்ரமான கங்கா நதி பூமியில் பெருகியெடுத்து ஓட ஆரம்பித்த தினம்.

சித்திரை 21 (04-05-2023) வியாழக்கிழமை : நரசிம்ம ஜெயந்தி.

சித்திரை 22 (05-05-2023) வெள்ளிக்கிழமை : சித்ரா பௌர்ணமி. கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் மதுரையில் பிரசித்தம். சித்திர குப்தர் அவதார தினம். நமது புண்ணிய, பாபச் செயல்களைக் குறித்து வைக்கும் பொறுப்பேற்றுள்ள அவதார புருஷர் இவர் இருப்பது தர்ம லோகத்தில். இன்று அவரைப் பூஜிப்பது, மகத்தான புண்ணிய பலனைத் தரும். இனி, எமது வாசகர் அன்பர்களுக்கு. சித்திரை மாத ராசி பலன்களை அளிப்பதில் மனநிறைவைப் பெறுகிறோம். வழக்கம்போல், எந்தெந்த ராசியினருக்கு அவசியமோ அவர்களுக்கு எளிய பரிகாரங்களையும் கூறியிருக்கின்றோம்.

ஆன்றோர் அமுத மொழி!

“பெண்மணிகளுக்கு, எவ்விதம் கற்பு அவசியமோ, அவ்விதமே ஆண்களுக்கு ஒழுக்கம் அவசியம். திருமணமான பெண், தன் மனத்தால்கூட பிற ஆடவரை, தன் கணவரைவிட உயர்ந்தவராக நினைத்தால், அக்கணமே அவள், தன் கற்பு நெறியிலிருந்து தவறியவளாகின்றாள். அதேபோன்று, பிற ஸ்திரிகளைக் கண்டு, மனத்தால் ஆசைப்படுவது, தன் மனைவியின் அழகுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, ஸ்பரிசிப்பது ஆகியவை, அத்தகைய புருஷர்களை மீளா நரகத்தில் தள்ளிவிடும். பெண்மணிகளுக்குக் கற்பும், ஆடவர்களுக்கு ஒழுக்கமும் இக, பர சுகங்கைளைக் கொடுக்கும் தர்ம நெறியாகும்.”

-மகரிஷி கௌதமர்

The post சித்திரை மாதத்தின் தெய்வீக சக்திகளும் ராசி பலன்களும்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED வித்தியாசமான தகவல்கள்